
விருதுநகர்
வாழ தகுதியற்ற நிலையில் 20 வீடுகள், 15 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காமல் இருக்கும் சமூதாயக் கூடம் என்று புறக்கணிக்கப்பட்ட தங்களது கிராமத்தை நேரில் பார்த்தாவது உதவி செய்யுங்கள் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகில் விஜயரெங்காபுரம் ஊராட்சியைச் சேர்ந்த மேலக்கோதை நாச்சியார்புரம் கிராமம் புறக்கணிக்கப்பட்ட கிராமமாக இருக்கிறது.
இங்கு ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் 40 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டன. அந்த வீடுகளை பராமரிக்க நிதி ஒதுக்கப்படாததால் 20 வீடுகள் குடியிருக்க தகுதியற்றதாக உள்ளன. மேற்கூரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மோசமான நிலையில் இருக்கிறது.
அங்குள்ள சமுதாயக் கூடம் 2002–ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. சுப நிகழ்ச்சிகளை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடத்த வேண்டிய நிலை இருக்கிறது. இந்த கட்டிடத்தையும் முறையாக பராமரிக்காததால் விரிசல் ஏற்பட்டு பரிதாபமான நிலையில் இருக்கிறது. அங்கன்வாடி மையமும் இதே நிலையில் தான் இருக்கிறது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே இருக்கும் சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளன.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலைகள் தற்போது முழுவதும் பழுதடைந்துள்ளன. இதனை சீரமைக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஊரின் மையப் பகுதியிலுள்ள குடிநீர் கிணற்றில் பலர் தவறி விழுந்துள்ளதால் அதற்கு மூடி போட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கை கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது.
மேலும், காளியம்மன் கோவில் அருகே உள்ள கிடங்கினை பலரும் குப்பைக் கொட்டும் இடமாக பயன்படுத்துகின்றனர். இதனால், சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கூறியது: “புறக்கணிக்கப்பட்ட தங்களது கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, ஆட்சியர் தங்களது கிராமத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.