
விழுப்புரம்
“வருவாய்த் துறையில் வெற்றிடமாக இருக்கும் நில அளவையாளர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புர்ம மாவட்டம், கள்ளக்குறிச்சியில், “தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட மாநாடு” நடைப்பெற்றது.
இந்த மாநாட்டிற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரபாகரன், பொருளாளர் ராஜாமணி, துணை தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் செந்தில்முருகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் குமாரவேல், பொருளாளர் ராஜா, விழுப்புரம் நில அளவை பதிவேடுகள் துறை மாவட்ட உதவி இயக்குனர் சண்முகம் ஆகியோர் பங்கேற்று நில அளவையாளர்களின் கோரிக்கைகள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
இந்தக் கூட்டத்தில், “வருவாய்த் துறையில் இருக்கும் நில அளவையாளர் வெற்றுப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஏழாவது ஊதியக் குழுவில் ஊதிய மாற்றம் பெற்றிட எட்டாவது ஊதியக்குழு அமைக்க வேண்டும்.
நில அளவையர் துறையை தொழில்நுட்ப துறையாக அறிவிக்க வேண்டும்.
துணை ஆய்வாளர் மற்றும் ஆய்வாளருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் நாகலிங்கம், சாம்பசிவம், சரண்யா, மகேஷ்வரன், கலா உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.