
வேலூர்
வேலூரில் பிரஸ் என்று வேனில் எழுதி 2 டன் செம்மரக்கட்டைகளை கடத்திய மினிவேன் விபத்துக்குள்ளானதால் அப்படியே போட்டுவிட்டு கடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர். வேனில் இருந்த செம்மரக்கட்டைகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம், ஆற்காடு ஆற்காட்டில் இருந்து கண்ணமங்கலம் வழியாக மினிவேன் ஒன்று சென்றுக் கொண்டுள்ளது.
நேற்று மதியம் அந்த வேன் சின்னதக்கைக் கிராமத்தின் அருகே வந்தபோது திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிய விபத்துக்குள்ளாகியது.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே இதுகுறித்து திமிரி காவலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் விபத்துக்குள்ளாகி நின்றிருந்த வேனில் யாரும் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த வேனை சோதனை செய்தனர்.
அப்போது, அந்த வேனில் 2 டன் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. மேலும் வேனின் பின்புறத்தில் ‘பிரஸ்’ என எழுதப்பட்டு, அதில் செம்மரங்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது.
இதுதொடர்பாக திமிரி காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து வேனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் காவலாளர்கள் விசாரணையைத் தொடர்கின்றனர்.
“பிரஸ்” என்று எழுதி செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த வேன் விபத்துக்குள்ளானதால் என்னசெய்வதென்று தெரியாமல் வேனை நிகழ்விடத்திலேயே போட்டுவிட்டு கடத்தியவர்கள் ஓடி இருக்கலாம் என மக்கள் பேசிக் கொண்டனர்.