
மத்திய அரசு உதவாவிட்டாலும் தமிழக அரசு உதவும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய கடன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
41 வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வந்தது.
இதனிடையே நிதி ஆயாக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி அனைத்து கட்சியினர் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு வருகை தருமாறு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு அழைப்பு விடுவித்தார்.
அதன்படி முதலமைச்சர் எடப்பாடி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று போராட்டம் வாபஸ் பெறுவதாக தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு கூறியதாவது :
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
மத்திய அரசு உதவாவிட்டாலும் தமிழக அரசு உதவும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
இன்னும் 30 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும்.
மே 25 வரை நாங்கள் பொறுத்திருப்போம்.
அதேபோல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் தங்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.
கடன்களை வாங்க குண்டர்களை வைத்து தாக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அவரின் கோரிக்கையையும் ஏற்றுகொள்கிறோம்.
ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற இருக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் நாங்கள் பங்கேற்க இருக்கிறோம்.
அனைத்து மாநில விவசாயிகளும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.