
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி மக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் சுப்பிரமணியன் அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை வழக்கத்தை விட குறைந்த அளவே பெய்துள்ளதால் நீர்நிலைகள் அனைத்தும் நீரின்றி இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. தற்போது மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தட்டுப்பாட்டை போக்கி மக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக கைப்பம்புகள், சிறு மின்விசைப் பம்புகள், மின்விசைப் பம்புகளுக்கான ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் வேண்டும்.
தேவைப்படும் இடங்களில் அதிக திறன் கொண்ட மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் விநியோகத்தை சரிசெய்தல் வேண்டும்.
மேலும், பயன்பாட்டில் உள்ள குடிநீர் ஆதாரங்களை சரிசெய்வதோடு மட்டுமல்லாமல் எங்கெங்கு புதிய மாற்று ஆழ்துளை கிணறுகள், மின்விசைப் பம்புகள், குடிநீர் குழாய் மேம்பாட்டு பணிகள் தேவை உள்ளதோ அப்பகுதிகளுக்கு புதியதாக பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பொது குடிநீர் விநியோக குழாய்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள முறையற்ற குடிநீர் இணைப்புகள் மற்றும் மோட்டார்கள் மூலம் குடிநீரை பயன்படுத்துபவர்கள் தாங்களாகவே முன்வந்து அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகளை துண்டித்துக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் குடிநீர் சீராக வழங்குவதை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.