
வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மலையாகவே உள்ளது. இங்குள்ள வனப்பகுதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த காட்டுப்பகுதியில் முயல், மான், பாம்பு, நரி உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. இதனை பிடிக்க சிலர் காட்டுக்குள் நுழைவதும், அவர்களை வனத்துறையினர் கைது செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
மேலும், ஏலகிரி மலை காட்டுப்பகுதியில் செம்மரம் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. அவற்றை மர்மநபர்கள் அடிக்கடி வெட்டி கடத்தி சென்றனர். இதுபற்றி வனத்துறையினருக்கு பலமுறை புகார் வந்தபோதும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியாமல் இருந்தது.
இதைதொடர்ந்து, பேச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்தவர்கள் வேல்முருகன், தம்பிதுரை. காப்புக்காட்டில் இருந்து மரங்களை வெட்டி கடத்தி செல்பவர்களை பிடிக்க இவர்கள் இருவரையும் மேலிடம் ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டது.
இந்நிலையில், ஏலகிரி மலை காப்பு காட்டில் இருந்து, இன்று அதிகாலையில் போலீஸ் வாகனத்தில், மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள், காப்புக்காட்டை சுற்றி தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த வேல்முருகன், தம்பிதுரை ஆகியோர் செம்மரத்தை வெட்டி போலீஸ் வாகனத்திலேயே கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள், துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.