
செல்போன் மற்றும் கண்காணிப்பு கேமராவை வைத்து குற்றவாளி களை கைது செய்த போலீஸார், 80 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பெரும் சவாலான வழக்கை 2 மாதங்களில் விரைந்து முடித்துள்ளனர்.
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் சரவணா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். சாப்ட்வேர் இன்ஜினியர். கடந்த ஏப்ரல் மாதம் கார்த்திகேயன், குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
அந்த நேரத்தில், அவரது வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்து 80 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். மேலும், தடயம் எதுவும் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு சென்றனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கார்த்திகேயன் வீட்டில் அனைத்து தடயமும் அழிக்கப்பட்டதால், சேலையூர் போலீசார், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர்.
இதை தொடர்ந்து இந்த வழக்கு பரங்கிமலை துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படைக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கை விசாரிக்க தொடங்கிய தனிப்படை போலீஸார், கார்த்திகேயன் வசிக்கும் குடியிருப்பு மற்றும் அந்த பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
பின்னர், அந்த பகுதி யில் அதிகமாக சுற்றி வந்த வாகனங் களையும், அவை யாருக்கு சொந்த மானவை எனவும் விசாரித்தனர்.
அதில், ஒரு கார் சம்பந்தம் இல்லாமல் அந்த பகுதி முழுவதும் இரவு - பகலாக வலம் வந்தது தெரியவந்தது. குறிப்பாக முகப்பு விளக்கை போடாமல் இருந்ததால், சந்தேகம் வலுத்தது. எனவே கார் பதிவு எண் குறித்து விசாரிக்க தொடங்கினர்.
இதற்கிடையில், மேற்கண்ட பகுதியில் இருந்து குறிப்பிட்ட நாளில் எந்தெந்த எண்களுக்கு அழைப்பு சென்றது, வந்தது என ஆராய்ந்தனர். அதில், கிடைத்த தகவலின்படி சென்னை கொளத்தூரை சேர்ந்த வினோத்குமார் (27) டேவிட் (29), பாலாஜி (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், 3 பேரும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் சிறைக்கு சென்றுள்ளார்கள். அதுபோல் சிறைச்சாலையில் 3 பேரும் சந்தித்தபோது, அவர்களுக்கு நட்பு ஏற்பட்டது.
பின்னர், அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததும், தங்களுக்கு தெரிந்த கைவரிசைகளை பற்றி பேசியுள்ளனர். இதனால், அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவர்கள் பல்வேறு பகுதிகளில் நோட்டமிட்டு, வீடுகளை உடைத்து கொள்ளையடித்தனர்.
அதேபோல், கார்த்திகேயன் வீட்டை நோட்டமிட்ட அவர்கள், சம்பத்தன்று நுழைந்து கொள்ளையடித்துசென்றனர் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.