சென்னையில் உள்ள பள்ளிகளில் குண்டு வெடிக்கப்போவதாக வெடி குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
முதல்வரின் பிறந்த நாளையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் வெடிகுண்டு வெடிக்கும் என காலை 7.30 மணி அளவில் தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களை கொண்டு தலைமைச் செயலகம் முழுவதும் அமைச்சர்கள் அறை, பேரவை நடைபெறும் இடங்கள் முக்கிய அறைகள் என அனைத்து இடங்களிலும் அதிரடியாக சோதனைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிர சோதனையில் போலீஸ்
வெடிகுண்டு உள்ளதா என்பது குறித்து கருவிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் தனி தனி குழுக்களாக பிரிந்து சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் மிரட்டல் உண்மையா அல்லது வதந்தியா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சிக்கு ஃபோன் செய்து தலைமைச் செயலகம் மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்