பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டு, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 2026 தேர்தல் கூட்டணி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரிக்கு அருகில் உள்ள விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கட்சியின் தலைவராக ராமதாஸ் தொடர்ந்து நீடிப்பார் என்றும், 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, அன்புமணி ராமதாஸ் தான் கட்சியின் தலைவராக இருந்தார்.
மேலும், கட்சியின் விதியில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பொதுக்குழு கூட்டத்திற்கு நிறுவனரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என்றும், அவருக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை குழுவின் சார்பாக 16 குற்றச்சாட்டுகளை ஜி.கே. மணி பட்டியலிட்டார்.
ராமதாஸுக்குத் தெரியாமலேயே பாமக தலைமை அலுவலகத்தை மாற்றியது.
ராமதாஸிடம் எதுவுமே பேசாமல், 40 முறை பேசியதாக பொதுவெளியில் சொன்னது.
ஜி.கே. மணி மற்றும் அருள் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டுப் பிரார்த்தனை செய்வதாக கிண்டல் செய்தது.
ராமதாஸ் நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தது செல்லாது.
மக்கள் தொலைக்காட்சியை அபகரித்துக் கொண்டது.
மேற்கண்ட 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க, 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு, ராமதாஸுக்குப் பரிந்துரை செய்துள்ளது என ஜி.கே. மணி தெரிவித்தார்.
மேலும், தனக்கு ஒரு பெரிய திட்டம் இருப்பதாக ராமதாஸ் தன்னிடம் கூறியதாகவும், ராமதாஸுடன் இருப்பதால் எதிர்தரப்பினர் தன்னை வாட்டி வதைப்பதாகவும், முகநூலில் ராமதாஸையும் அன்புமணி தரப்பினர் வாட்டி வதைப்பதாகவும் ஜி.கே. மணி கூறினார்.