பட்ஜெட்டில் தமிழ் நாட்டின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றால் நீங்கள் எங்களுக்கு 25 எம்.பி.யாவது கொடுத்திருக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளது சர்ச்சைய ஏற்படுத்தி உள்ளது.
2024 - 25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் பிற மாநிலங்களைக் காட்டிலும் பீகார் மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. முன்னதாக பீகார் மற்றும் ஆந்திர பிரதேச மாநில ஆளும் கட்சிகளின் ஆதரவால் தான் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது. இதன் கைமாறாகவே மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகாருக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் முன்னதாகவே பட்டியலிட்டிருந்த நிலையில் பட்ஜெட்டில் தமிழ் நாடு என்ற பெயரே இடம் பெறாதது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பாஜக மற்றும் பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
சீனியர், ஜூனியர் பாரபட்சம் கிடையாது; 6 மாணவிகளை ஏமாற்றி பாலியல் தொல்லை - கோவை இளைஞன் கைது
இந்நிலையில், இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் தனித்தனியாக குறிப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. இது நாட்டின் அனைத்து மாநிலங்களுக்குமான பொதுவான பட்ஜெட். அதன்படி தமிழத்திற்கு இது தான், கேரளாவிற்கு இது தான் என தனித்தனியாக பெயர் சொல்ல முடியாது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ் நாட்டின் பெயல் இல்லை என்று கூறுகின்றனர். பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு 25 எம்.பி.யையாவது கொடுத்திருக்க வேண்டும். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கிடைத்துள்ள நிதி எவ்வளவு என்பது தொடர்பான தரவுகளுடன் விரைவில் கூறுவோம். பட்ஜெட்டில் எங்களுக்கும் சில வருத்தம் இருக்கத் தான் செய்கிறது” என்றார்.