சமையல் எரிவாயு மானியம் ரூ.200...! அனைத்து மக்களுக்கும் பயனளிக்காது... ராமதாஸ் விமர்சனம்

By Ajmal KhanFirst Published May 22, 2022, 10:42 AM IST
Highlights

சமையல் எரிவாயு மானியம் அனைவருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.  

பெட்ரோல் விலையை குறைத்த மத்திய அரசு

 மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ள நிலையில் தமிழக அரசும் வரியை குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8  ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு இணைப்புகளுக்கு, ஆண்டுக்கு 12 எரிவாயு சிலிண்டருக்கு, தலா 200 ரூபாய் மானியம், பிளாஸ்டிக், நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்கு மீதான வரி குறைப்பு, கூடுதல் உர மானியம், சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை என அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர். மாநில அரசும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இதனைய ஏற்று  கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ளன. தமிழக அரசும் மதிப்பு கூட்டு் வரியை குறைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சமையல் எரிவாயு மானியம் ரூ.200
 
இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பெட்ரோல் மீது ரூ.8, டீசல் மீது ரூ.6 கலால் வரியை வரியை மத்திய அரசு குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.   சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ.200 மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது எரிவாயு இணைப்பு  வைத்திருப்பவர்களில் மூன்றில் இரு பங்கினருக்கு பயனளிக்காது! என தெரிவித்துள்ளார்.  சமையல் எரிவாயு மானியம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கான உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவர்கள் எண்ணிக்கை 9 கோடி மட்டுமே. மொத்தமுள்ள 30 கோடி எரிவாயு இணைப்புகளில்  22 கோடி இணைப்புகளுக்கு இந்த மானியம் கிடைக்காது! என கூறியுள்ளார். 

அனைத்து தரப்பு மக்களுக்கும் மானியம்

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மட்டுமின்றி, ஏழை மற்றும் நடுத்தர மக்களாலும் எரிவாயு விலை உயர்வை தாங்க முடியாது. அந்த குடும்பங்களுக்கும் எரிவாயு மானியத்தை நீட்டிப்பதால் மத்திய அரசுக்கு கூடுதலாக ஆகும் செலவு அதிகமாக இருக்காது. அதனால், எரிவாயு மானியத்தை நீட்டிக்க வேண்டும்! என கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசு இரு தவணைகளாக எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசுக்கும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டிய கடமை உண்டு என கூறியுள்ளார். எனவே மாநில அரசும் பெட்ரோல், டீசல் வரிகளைக் குறைத்து மக்களின் சுமையை  போக்க முன்வர வேண்டும்! என அந்த டுவிட்டர் பதிவில் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

click me!