
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக அமெரிக்கா சென்று சிகிச்சை முடித்துக் கொண்டு திரும்பிய விஜயகாந்த், தொடர் மருத்துவ பரிசோதனைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 14 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நீரிழுவு நோய் காரணமாக விஜயகாந்தின் கால் விரல் அகற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இது பற்றி தே.மு.தி.க. தலைமை கழகம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தது.
அதில், “நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினை காரணமாக தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால்... மருத்துவர்கள் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப் படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்,” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பிரேமலதா விஜயகாந்திடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார். மேலும் விஜயகாந்த் விரைந்து நலம் பெற்று திரும்ப வேண்டிக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.