மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 திட்டம்... ஊக்கத் தொகை பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியீடு..!

By Kevin KaarkiFirst Published Jun 22, 2022, 7:15 PM IST
Highlights

நடப்பு கல்வி ஆண்டு முதல் இந்த திட்டம்  நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் நாடு அரசு திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டு முதல் இந்த திட்டம்  நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தகுதி உடைய மாணவிகளிடம் இருந்து சான்றிதழ்களை பெற அனைத்து கல்லூரிகளுக்கும் உயர் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. 

தமிழ் நாட்டில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூலை 15 ஆம் தேதி துவங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாத வாக்கில் நடைபெற்றது. இதில் 2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து இருந்தார். பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 36 ஆயிரத்து 895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதில் உயர் கல்வித் துறைக்கு மட்டும் ரூ. 5 ஆயிரத்து 668 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நிதி அமைச்சர் அறிவிப்பு:

பட்ஜெட் தாக்கலின் போது உரையாற்றிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசு பள்ளி மாணவிகளில் உயர் கல்வியில் சேர்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை காரணமாக கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அ்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் கீழ், மாணவிகள் உயர் கல்வியை பாதியில் நிறுத்துவதை தடுக்கும் வகையில், கல்லூரியில் சேர்ந்து கல்வி காலம் முடியும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத் தொகை வழங்குவதாக நிதி அமைச்சர் அறிவித்து இருந்தார். 

பட்டியல் வெளியீடு:

இந்த நிலையில், தமிழ் நாட்டில் உயர் கல்விக்கான ஊக்கத் தொகை பெறும் மாணவர்கள் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு உள்ளது. இதில் தமிழகம் முழுக்க சுமார் இரண்டு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் பெற தகுதி பெற்று உள்ளனர். தகுதி பெற்ற மாணவர்கலின் விவரங்கள் - http://studentsrepo.tn http://schools.gov.in வலைதள முகவரியில் பார்க்க முடியும். 

click me!