வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களை ஆதாரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், நடப்பாண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு ஐந்து முறை வருகை புரிந்துள்ள பிரதமர் மோடி, 2 நாட்கள் பயணமாக 6ஆவது முறையாக நேற்று மீண்டும் தமிழகம் வந்தார். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் நடைபெற்ற வாகன பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை கலந்து கொண்டார். அதனை முடித்துக் கொண்டு சென்னையில் இரவு ஓய்வெடுத்த பிரதமர் மோடி, இன்று காலை சென்னையில் இருந்து வேலூர் புறப்பட்டு சென்றார்.
அண்ணாமலை தமிழனே இல்லை.. பாஜக ஓட்டு நோட்டாவுக்கு கீழே தான்.. பிரச்சாரத்தில் பிச்சு எடுத்த கனிமொழி!
அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, வேலூர் மக்களவைத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும், பாஜக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
அதன்பிறகு, கோவை சென்று, அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களான எல்.முருகன் (நீலகிரி), அண்ணாமலை (கோவை), கே.வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்), கே.பி.ராமலிங்கம் (நாமக்கல்), பி.விஜயகுமார் (ஈரோடு), ந.அண்ணாதுரை (சேலம்) ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளார்.
பிரசாரத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் பிரதமர் மோடி, மீண்டும் தமிழகம் வருகை புரிந்து, வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில் பெரம்பலூர், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.