
வேலூர்
பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமைத் தாங்குவார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு கோரிக்கை மனுக்கள் கொடுப்பார்கள். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 25–ஆம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த தேதியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் அரசின் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம், அம்மா திட்ட முகாம் போன்ற அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கில் கடந்த 4–ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து அரசின் நிகழ்ச்சிகள் நடைபெற தொடங்கின.
அதன்படி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை மக்கள்குறை தீர்வு கூட்டம் வழக்கம்போல் நடந்தது. கூட்டத்திற்கு ஆட்சியர் ராமன் தலைமைத் தாங்கினார். நீண்ட நாள்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்ததால் பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை. இதனால், குறைதீர்வு கூட்டத்திற்கு குறைவான மக்களே மனு கொடுக்க வந்தனர். காலை 11.30 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் அமர்த்தப்படவில்லை. அதன் பின்னரே பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.
பரதராமி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
“சமீபத்தில் நடைபெறுவதாக இருந்த உள்ளாட்சி தேர்தலில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஆதிதிராவிடர் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பரதராமி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 10 ஆயிரத்து 500 பேர், அதில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 846 பேர் ஆகும்.
அதில் ஆதிதிராவிடர் வாக்காளர்களை தவிர்த்து, இதர வாக்காளர்களின் வாக்குகள் 81 சதவீதம் ஆகும். எனவே, பரதராமி ஊராட்சியை பொதுப் பெண்கள் பிரிவாக அல்லது பொதுப்பிரிவுவாக அறிவிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆம்பூர் தாலுகா, விண்ணமங்கலம் அடுத்த கன்னடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கொடுத்துள்ள மனுவில், இப்பகுதியில் உள்ள 135 குடும்பத்தினர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பல்வேறு விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்த 19 பேரின் குடும்பத்துக்கு முதல் –அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.27 இலட்சத்து 15 ஆயிரத்திற்கான காசோலைகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் நடைபெற்று முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 பொதுத் தேர்வில் உருது மொழியினை முதல் அல்லது 2–ஆம் பாடமாக பயின்று மாநில அளவில் முதல் 3 நிலைகளில் தேர்ச்சி பெற்ற 14 சிறுபான்மையின மாணவ–மாணவிகளுக்கு மொத்தம் ரூ.1 இலட்சத்து 14 ஆயிரத்துக்கான காசோலைகள், வாணியம்பாடி தாலுகா ஆண்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்த காயத்திரி (9) என்ற பெண் குழந்தை வன்கொடுமையால் இறந்ததையொட்டி அவரது தந்தை ராமச்சந்திரனிடம் ரூ.3 இலட்சத்திற்கான காசோலையையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.76 ஆயிரத்து 800 மதிப்பில் 3 பயனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்களையும், 1 பயனாளிகளுக்கு கால் தாங்கியும், வாலாஜா தாலுகாவைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகளையும் ஆட்சியர் ராமன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோசப் டி.ரவி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.