
விருதுநகர்
விருதுநகர் - இராமநாதபுரம் இடையே உள்ள வண்டல் கிராமத்தில் இருக்கும் அரசு சாராயக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் - இராமநாதபுரம் இடையே நைனார் கோயில் செல்லும் சாலையில் உள்ளது அரசரடி வண்டல் கிராமம்.
இங்கு நடைபெற்ற போராட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சிவ செல்வராஜ் தலைமை தாங்கினார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் இந்தப் போராட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினார். அதில், "சாராயக் கடையை அகற்றாவிட்டால் மக்களைத் திரட்டி சாலை மறியல், சாராயக் கடையை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்படும்" என்று அவர் பேசினார்.
மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் ஆர்.ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகநாதன், கே.நாகு, எம்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இராமநாதபுரம் நகர் தலைவர் எஸ்.ஆர்.மாரியப்பன், மாவட்ட தலைவர் கே.ஜி.ரவி சேதுபதி, மாவட்டப் பொருளாளர் கே.மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
போராட்டத்தின் இறுதியில் போகலூர் ஒன்றிய தலைவர் எஸ்.முனியசாமி நன்றி தெரிவித்தார்.