
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுற்றதைத் தொடர்ந்து இனி கடுமையான வெயில் அடிக்கும் என்றும், வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தேனி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்கள் மட்டுமே வடகிழக்கு பருவமழையால் பயன்பெற்றன. மற்ற மாவட்டங்களில் கடும் வறட்சியே காணப்படுகிறது. ஏரிகளும், கண்மாய்களும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.
அதே நேரத்தில் குமரிக்கடல் அருகே உருவான ஒகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டிப் போட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பெரிய பாதிப்பை கன்னியாகுமரி மாவட்டம் சந்தித்தது. 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒகி புயலில் சிக்கி மாயமானார்கள். அவர்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் குமரி மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது பனிக்காலம் தொடங்கியுள்ளது. உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தரையில் பனி உறைந்து காணப்படுகிறது.
குறைந்தபட்ச வெப்பநிலையாக கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஊட்டியில் 11 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னையில் சராசரியாக 23 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 7 டிகிரி குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இனி தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் பகல் நேரங்களில் கடுமையான வெயில் நிலவும் என்றும், வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.