
மூன்று மாதங்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் மணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலக வாசல் முன்பு வெற்றுக் குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு உள்பட்ட வார்டு எண் 13 காந்தி நகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தண்ணீருக்காக அலைகின்றனர். ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் உள்ள நிலையில் பழுதான மின்மோட்டாரால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தினர். ஆனால், ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லை என்று கூறி மின்மோட்டார் பழுதை சரி செய்ய மறுக்கின்றனர்.
மேலும், வீடுகளில் உள்ள காவிரி குடிநீர் குழாய் இணைப்புகளில் பலரும் மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சி விடுவதால் பொது இடங்களில் உள்ள காவிரி குடிநீர் குழாயில் தண்ணீர் போதுமான அளவில் வராத நிலையில், மக்கள் குடிநீர் இன்றி கடும் அவதிக்கு ஆளாகும் நிலைவுள்ளது.
இந்த நிலையில் அந்த பகுதி பெண்கள் நேற்று காலை மணப்பாறை நகராட்சி அலுவலகத்திற்கு வெற்றுக் குடங்களுடன் வந்தனர். அவர்கள் குடிநீர் கேட்டு, நகராட்சி அலுவலக வாசல் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, “காவிரி குடிநீரை மின்மோட்டார் வைத்து உறிஞ்சுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மின்மோட்டாரும் விரைவில் பறிமுதல் செய்யப்படும். மேலும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இருப்பின், மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதையடுத்து மக்கள் கலைந்துச் சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரச் செயலாளர் முகமது உசேன், சௌகத் அலி உள்பட பலர் பங்கேற்றனர்.