
தஞ்சாவூர்
மூன்று மாதங்களாக ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்காததால் ஆத்திரமடைந்த மக்கள், மூன்று நாட்களுக்குள் குடிநீர் வினியோகிக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று ஆட்சியரிடம் எச்சரித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கொ.வல்லுண்டான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் ஆட்சியர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், "எங்கள் கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. மூன்று மாதங்களாக ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை.
இதனால் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அலைச்சல் ஏற்படுவதுடன் எங்களது வேலைகளும் பாதிக்கப்படுகிறது.
எனவே, குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று எச்சரித்து இருந்தனர்.