
கடலூர்
கடலூரில் ஆறு மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வரும் கிராம மக்கள், வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது உத்திரசோலை ஊராட்சி. குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த ஊராட்சிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள இருதயபுரம் கிராமத்தில் கிழக்கு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகவே ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அருகில் உள்ள விளை நிலம், கிராம பகுதிக்கு சென்று மக்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்திற்கு அருகே உள்ள எய்யலூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தற்போது சாலையைத் தோண்டி புதிதாக குழாய் பதிக்கும் பணி நடைப்பெற்றது.
இந்தப் பணியின்போது இருதயபுரம் கிராமத்திற்கு வந்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம், குடிநீர் குழாய் சேதப்படுத்தப்பட்டதால் சரியான முறையில் குடிநீர் வருவதில்லை என்று இந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இதைக் கண்டுகொள்ளாமல், அலட்சியமாக இருந்தனர்.
இந்த நிலையில், பாதிப்புக்குள்ளான கிராம மக்கள் நேற்று காலை வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் செய்வதற்காக இரம்ஜான்தைக்கால் பேருந்து நிறுத்தம் அருகே சிதம்பரம் - திருச்சி நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காட்டுமன்னார் கோவில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியல் செய்ய வந்தவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், "எங்கள் பகுதிக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக குடிநீர் சரியான முறையில் வருவது இல்லை, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு குழாய் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டதில் சாலைகள் அனைத்தும் சேதமாகிவிட்டன. இதை உடனடியாக சரிசெய்து தரவேண்டும்" என்று வலியுறுத்தினர்.
இதனையடுத்து காவலாளர்கள், குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கிராம மக்களிடம் காவலாளர்கள், "இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரி உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்தனர். இதனையேற்று அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.