
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, சாராயம் குடித்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க 22 தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்க காவலாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
ஆங்கிலப் புத்தாண்டை மக்கள் விபத்தில்லாமல் கொண்டாடும் வகையில், கோவை மாநகர காவலாளர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதில், டிசம்பர் 31-ஆம் தேதி இரவு விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
குறிப்பாக இளைஞர்கள் சாராயம் குடித்தால் அவர்களை வாகனம் இயக்க அனுமதிக்கக் கூடாது. விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் கேளிக்கை என்ற பெயரில் ஆபாச நடனங்கள் நடத்த தடை விதித்துள்ளனர். மேலும், இரவு 12.30 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொள்ள வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
கோயம்புத்தூர் - அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட இடங்களில் 22 தற்காலிகச் சோதனைச் சாவடிகள் டிசம்பர் 31-ஆம் தேதி அமைக்கப்பட உள்ளது.
இந்த சோதனைச் சாவடிகளில் சாராயம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்களைப் பிடித்து சாலை விபத்து, குடிபோதையில் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கப்பட உள்ளன.
கோவை மாநகரில் அதிவேகமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவதைத் தடுக்கும் வகையில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி காலை 6 மணி வரையில் காந்திபுரம், வடகோவை உள்ளிட்ட மேம்பாலங்களிலும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
கோவை -அவிநாசி சாலை, கொடிசியா, வ.உ.சி.பூங்காஉள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் 1500 காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்தப் பணிகளில் சட்டம் - ஒழுங்கு காவலாளர்கள் மட்டுமன்றி போக்குவரத்து, ஊர்க் காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.