பால் கொள்முதல் நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு சேரவேண்டிய பணத்தை வாங்கித்தர கோரி விவசாயிகள் சாலை மறியல்...

 
Published : Dec 23, 2017, 08:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
பால் கொள்முதல் நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு சேரவேண்டிய பணத்தை வாங்கித்தர கோரி விவசாயிகள் சாலை மறியல்...

சுருக்கம்

Farmers demanding to buy money from the milk procurement company

கடலூர்

கடலூரில் தனியார் பால் கொள்முதல் நிறுவனத்திடம் இருந்து, தங்களுக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுத் தரக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பைத்தான்பாடி சத்திரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பால் கொள்முதல் நிறுவனம் ஒன்று இருந்தது. இதில், அந்தப் பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராம விவசாயிகள் பால் வழங்கி வந்தனர்.

இதன்மூலம், அந்த நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு 36 இலட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. திடீரென, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பால் கொள்முதல் நிலையத்தைப் பூட்டிவிட்டு அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சென்றுவிட்டனர்.

இதனையடுத்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகள், தங்களது பணத்தை சம்பந்தப்பட்ட பால் கொள்முதல் நிலையத்தின் உரிமையாளர்களிடம் இருந்து வாங்கி தர வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இந்த நிலையில், கடந்த மாதம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதனால், தாசில்தார் விஜய் ஆனந்த் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், "விரைவில் அவர்களுக்கு சேரவேண்டிய பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்தாரிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தாசில்தார் தெரிவித்தார்.

ஆனால் நாட்கள் பல கடந்தும் இதுவரையில் பணம் வந்து சேராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் மக்கள் பாதுகாப்பு கவசம் என்கிற அமைப்புடன் இணைந்து சாலை மறியல் செய்ய போவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று காலை விவசாயிகள், மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பின் நிர்வாகிகள் பண்ருட்டியில் கடலூர் சாலையில் உள்ள பயணியர் விடுதி அருகே ஒன்று திரண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் செய்ய அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் விஜய் ஆனந்த், புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் அங்கு வந்து, அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், "வருகிற 29-ஆம் தேதிக்குள் தனியார் பால் கொள்முதல் நிறுவனத்தின் உரிமையாளரை அழைத்து சுமூக தீர்வு ஏற்படுத்தி தரப்படும்" என்று உறுதி அளித்தனர்.

இதனையேற்று விவசாயிகள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பை சேர்ந்த சேதுராஜன், தட்சிணாமூர்த்தி, அதன் நிர்வாகிகள் விவசாயிகள் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!