மேம்பால பணிகளில் தொய்வு… போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்!!

By Narendran SFirst Published Oct 30, 2021, 2:33 PM IST
Highlights

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால பணிகள் காரணமாக  ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

தமிழகம்‌ முழுவதும்‌ மக்களின்‌ போக்குவரத்து வசதிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழத்தின் பெருநகரங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் அதன் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பாதை மாற்றம், நெடுநேர பயணம், போக்குவரத்து நெரிசல் என பாலம் கட்டும் பணிகள் முடியும் வரை மக்கள் சந்திக்கும் சிரமங்கள் ஏராளம். தமிழகம்‌ முழுவதும்‌ போக்குவரத்து நெரிசலைக்‌ குறைக்க கட்டப்படும் பாலங்களுக்கான பணிகளை விரைந்து முடிக்க மக்கள் வேண்டுகோள் விடுத்தாலும் அதன் பணிகள் மெதுவாகவே நடைபெறும்.  இந்த நிலையில் கோவை கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.85 கோடி மதிப்பில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கி.மீ. நீளத்துக்கு கட்டப்படும் இந்த பாலத்தின் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, விரைவாக நடைபெற்றது. தூண்களும் வேக வேகமாக அமைக்கப்பட்டன. பின்னர் அந்த பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதை அடுத்து தூண்கள் அமைக்க தோண்டப்பட்ட சாலைகள் அப்படியே விடப்பட்டன.

இதனால் சாலை சிதிலமடைந்து மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாய் காட்சியளிக்கிறது. சர்வீஸ் சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்ததோடு வாகன ஓட்டிகளுக்கு இது கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. அதுபோல் கோவை மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் சிதிலமடைந்த கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் நீர் தேங்கி ஆறுபோல் கட்சி அளிக்கிறது. இதுமட்டுமின்றி சாலையின் நடுவே 2 அடி ஆழம் வரை பள்ளங்களும் உருவாகியுள்ளன. இதனால் மக்கள் மாற்று வழியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மாற்றுவழி பாதைக்கான முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கவே 1 மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. மழை நேரங்களில் சாலைகள் முற்றிலும் நீர் தேங்கியுள்ளதால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அதுமட்டுமின்றி சேதம் அடைந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது விபத்துகளும் ஏற்படுகின்றன. மாற்று வழிகளில் செல்லலாம் என்றால் அங்கு போதுமான சாலை வசதிகள் இல்லை. அறிவிப்பு பலகைகளும் இல்லை. இதனால் நாங்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையீட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்கின்றனர். இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால், மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து அத்திப்பாளையம் பிரிவு, கீரணத்தம், சரவணம்பட்டி வழியாக பயணிகள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், பயணம் செய்யும் துாரம் அதிகம் என்பதால், பெரும்பாலனோர் இப்பாதைகளை பயன்படுத்துவதில்லை. அனைத்து பாலங்களின் கட்டுமான பணியும் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள், முழுமையாக முடிந்து விடும் என்றனர்.

click me!