ஜனநாயக நாட்டில் சர்வதிகாரம்… ஆதங்கம் தெரிவிக்கும் தமிழக விவசாயிகள்!!

By Narendran SFirst Published Oct 30, 2021, 1:11 PM IST
Highlights

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 18வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை தர வேண்டும், விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் பைபாஸ், மலர் சாலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 46 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு இந்த போராட்டத்திற்கு தலைமை வகிக்கிறார்.

ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் போராட்டத்தின் முதல் நாளில், விவசாயிகள் சட்டை இல்லாமல் இருந்த விவசாயிகள், இரண்டாம் நாள் கோவணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றாம் நாள் பிச்சை எடுத்தும், நான்காம் நாள் மண்டை ஒட்டுடனும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் ஒவ்வொரு நாள் போராட்டமும் அரசையும் அரசினால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் தெரிவிக்கும் வகையில் உள்ளது. அந்த வரிசையில் , ஐந்தாவது நாள் நாமம் போட்டும், ஆறாவது நாள் எலியை பிடித்து தின்றும் உன்ன உணவில்லாமலும் இறந்ததால் இறந்த விவசாயிகளுக்கு பாடை கட்டியும், ஏழாவது நாள் வாயை கட்டியும், எட்டாவது நாள் தூக்கு கயிறை கழுத்தில் மாட்டி கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஒன்பதாவது நாள் பிரதமர் மோடி காலில் விழுந்து காப்பாற்று காப்பாற்று என கெஞ்சியும், பத்தாவது நாள் இலை தளைகள் கட்டி கொண்டு ஆதிவாசி போன்றும், பதினொன்றாவது நாள் சங்கிலியால் கால்களை கட்டிக்கொண்டும், பன்னிரெண்டாவது நாள் வாயில் ரப்பாரை வைத்து கொண்டும், பதிமூன்றாவது நாள் முகங்களில்  கரியை பூசிக்கொண்டும், பதினான்காவது நாள் நெஞ்சில் கல்லை போட்டுக்கொண்டும், பதினைந்தாம் நாள் சங்கு ஊதி மணி அடித்தும், பதினாறாவது நாள் எலும்புகளுக்கு பால் தெளித்து ஈமக்காரியம் செய்தும், பதினேழாவது நாள் இறந்த விவசாயிகளின் அஸ்தியை காவிரியில் கரைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வரிசையில் இன்று 18வது நாளாக  இறந்த விவசாயிகளின் அஸ்தியை கரைக்க சென்ற விவசாயிகளை மத்திய அரசு காவல்துறையை வைத்து தடுத்து விவசாயிகளை கண்ணிருந்தும் குருடர்களாக மாற்றியதாக கூறி விவசாயிகள் கண்களை கட்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அய்யாக்கண்ணு, நாங்கள் டெல்லியில் போராட்டம் நடத்தியும் மத்திய மோடி அரசு எங்களை கண்டுக்கொள்ளவில்லை என்றும் ஜனநாயக நாட்டில் சர்வதிகாரி போல் நடந்துக்கொள்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் உயிரிழந்த விவசாயின் அஸ்தியை கரைக்க ஊர்வலமாக செல்லும் போது காவல்துறையை வைத்து எங்களை மோடி அரசு தடுத்து நிறுத்துவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.  18வது நாளாக தொடரும் விவசாயிகளின் நூதன உண்ணாவிரதப் போராட்டமும் அவர்களின் கோரிக்கைகளும் மத்திய அரசை எட்டும் என்று தாங்கள் நம்புவதாகவும் நம்பிக்கையோடு போராட்டத்தை தொடரப்போவதாகவும் விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

click me!