வெள்ளத்தில் இறங்கி வேலை செய்யும் பெண் ஊராட்சிமன்ற தலைவர்… குவியும் பாராட்டு!!

By Narendran SFirst Published Oct 30, 2021, 11:54 AM IST
Highlights

ஆம்பூர் அருகே வெள்ளப்பெருக்கால் உடைந்த குடிநீர் பைப்லைனை வெள்ளத்தில் இறங்கி சரிசெய்த பெண் ஊராட்சிமன்ற தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

வடக்கிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.  ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. ஒருசில பகுதிகளில் வெள்ளம் வந்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக  காட்பாடி, மேல் ஆலத்தூர், பொன்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், ஆம்பூர், வடபுதுப்பட்டு, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும், ஜவ்வாது மலை தொடரில் கனமழை கொட்டியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆண்டியப்பனூர் அணை 7 ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.  அணைகள் ஒருபுறம் முழுகொள்ளளவை எட்டும் நேரத்தில் மாவட்டத்தில் உள்ள ஏரிகளும் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரி நீர்வரத்து வேகமாக அதிகரித்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரி வரும் சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் வேலுார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 177 ஏரிகள் முழுவதும் நிரம்பியது.  கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்த தொடர் மழையால், பாலாறு, பொன்னையாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உபரி நீர் ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் 177 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளன. இந்த வெள்ள நீா் பொன்னை அணைக்கட்டு நிரம்பி, அங்கிருந்து மேற்கு மற்றும் கிழக்கு கிளைக் கால்வாய்கள் மூலம் ஏரி, குளங்கள் போன்ற நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 177 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளது. திருப்பத்துார் மாவட்டத்தில் 49 ஏரிகளில் 37. 19 மில்லியன் கன அடியும், வேலுாரில் 101 ஏரிகளில் 101.35 மில்லியன் கன அடியும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 ஏரிகளில் 472. 62 மில்லியன் கன அடி தண்ணீரும் உள்ளது.  இந்த நிலையில் ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிராம மக்களுக்கு செல்லும் குடிநீர் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டது. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் பைப்லைன் உடைப்புகள் ஏற்பட்டால் கண்டும் காணாமல் அதை கடந்து செல்வர். அப்படி இருக்கையில் ஆம்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் பெண் ஒருவர், சற்றும் யோசிக்காமல் வெள்ள நீரில் இறங்கி பைப்லைனை சரி செய்ய தொடங்கினார். அதை கண்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இப்படியும் சில ஊராட்சி மன்ற தலைவர்கள் இருக்கிறார்களா என்று எண்ணிய மக்கள் அவரின் இந்த செயலுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுக்குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை கண்ட இணையவாசிகள் அந்த ஊராட்சிமன்றத் தலைவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

click me!