
திருச்சி
அராஜகத்தில் ஈடுபட்ட காவலாளர்களைக் கண்டித்து திருச்சியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்து பேர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெறக்கோரினர்.
திருச்சி மாவட்டம், உய்யகொண்டான் திருமலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை காவல் உதவி ஆய்வாளர் கோபால் தலைமையிலான காவலாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பொறியியலாளர் பாலசந்தர், அவருடைய நண்பர் எம்.டெக். மாணவரான சந்தோஷ் ஆகியோரை வழிமறித்து அவர்களிடம் தலைக்கவசம் ஏன் அணியவில்லை? ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா? என்று கேட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலாளார்கள், அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவலாளர்களைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, காவலாளர்கள் தடியடி நடத்தி கலைத்தனர்.
மேலும், மக்களுக்கு இடையூறு செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த 10 பேர் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்து அராஜகப் போக்கை கடைப்பிடித்தனர்.
இதனைக் கண்டித்து நேற்று காலை திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே உய்யகொண்டான் திருமலை பகுதி மக்களுடன் சேர்ந்து "மக்கள் அதிகாரம்" அமைப்பினர் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமை வகித்தார்.
"தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் கோபாலை பணிநீக்கம் செய்ய வேண்டும்,
பத்து பேர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை காவலாளர்கள் திரும்ப பெற வேண்டும்.
இது தொடர்பாக நீதிபதி தலைமையில் உரிய விசாரணை நடத்த வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது/
இது குறித்து தகவல் அறிந்த காவலாளர்கள் நிகழ்விடத்துக்கு சென்று அவர்களிடம் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரார்கள், ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று, அங்கு இருந்த ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவியிடம் கோரிக்கை தொடர்பாக மனு ஒன்றை கொடுத்தனர்.
மற்றும் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடமும் மனு ஒன்றை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.