டாஸ்மாக் கடையை சூறையாடிய பொது மக்கள் - மதுவுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்

First Published Apr 26, 2017, 3:02 PM IST
Highlights
People protest against tasmac at thirupur


திருப்பூரில் டாஸ்மாக் மதுபானக் கடையை பொதுமக்கள் உடைத்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் சியாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறை உயர் அதிகாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஒருவரை கண்ணத்தில் ஓங்கி அறைந்த அந்த அதிகாரியை பணிநீக்கம் செய்யக் கோரி திருப்பூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசியல் கட்சியினரும் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தச் சூழலில் அங்குள்ள முதலிப்பாளையம் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் இக்கோரிக்கையை செவியில் வாங்கிக் கொள்ளாத அரசு அதிகாரிகள், தொடர்ந்து சமரசப் பேச்சுவார்த்தைக்கே முக்கியத்துவம் அளித்து வந்தனர்.

 இதனால் கொந்தளிப்புடன் அப்பகுதி மக்கள் காணப்பட்டு வந்தனர். இதற்கிடையே இன்று காலை மதுக்கடை அமைந்துள்ள பகுதி முன் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த பொதுமக்கள், போலீசாரையும் மீறி மதுக்கடையை ஒட்டிய பாருக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து நொறுக்கினர். நாற்காலிகள், குளிர்பான கண்ணாடி பாட்டில்கள் சூறையாடப்பட்டன. மேலும் பாரின் மேற்கூரையும் பிய்த்து எடுக்கப்பட்டது. இதனால் முதலிப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் அதிகமானோரை காவல்துறையினர் கைது செய்தனர். 
சியாமளாபுரத்தில் போடப்பட்டபோராட்ட விதை திருப்பூர் மாவட்டம் முழுவதும் வேர் விட்டு பரவி வருகிறது.......

click me!