
கரூரில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்த போதிலும், கரூரில் இருக்கும் மொத்தம் 286 அரசு பேருந்துகளும் பயணிகளுக்கு எந்த பாதிப்பையும் கொடுக்காமல் நாள் முழுவதும் வழக்கம்போல இயங்கின.
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,
விவசாயிகளின் பயிர் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 41 நாள்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்க தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி தமிழகத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. கரூர் ஜவகர் பஜார், கோவை சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
அதேபோன்று கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளும் மூடப்பட்டன. நகைக்கடைகள், துணிக்கடைகள் மூடப்பட்டன. இதனால் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோன்று கரூர் உழவர் சந்தை, கரூர் காமராஜ் சந்தை, பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டன.
ஆனால், கரூரில் நேற்று அரசு, தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. கரூர் கோட்டத்தில் உள்ள 286 பேருந்துகள் அனைத்தும் நேற்று வழக்கம் போல் இயக்கப்பட்டன.