
காஞ்சிபுரத்தில் விலங்கு அறிவியலுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தில் ரஷியா, நியூசிலாந்து சேர்ந்த 16 முயல்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன. அதிக பாதுகாப்பு மிகுந்த இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் திருட்டு நடந்திருப்பது பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் தமிழக அரசின் விலங்கு அறிவியலுக்கான முதுநிலை ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 516 ஏக்கர் பரப்பளவில் இயங்குகிறது.
இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த வெள்ளை பன்றிகள், ரஷியாவின் சோவியத் சின்செல்லா முயல்கள், நியூசிலாந்து வெள்ளை முயல்கள், நெருப்புக்கோழிகள், வாத்துகள், அரியவகை செம்மறி ஆடுகள், வெள்ளாடு, பசு மற்றும் எருமை மாடு ஆகிய விலங்குகள் போன்றவை இங்கு பராமரிக்கப்பட்டு, ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று அதிகாலை முயல்கள் அடைக்கப்பட்டு இருந்த இரும்புக் கூண்டை மர்மநபர்கள் உடைத்து அதில் இருந்த ரஷியாவைச் சேர்ந்த 11 முயல்கள், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த 5 வெள்ளை முயல்கள் என மொத்தம் 16 முயல்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை பேராசிரியர் மருத்துவர் எச்.கோபி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனே காவலாளர்கள் விலங்கு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதில் முயல்களை திருடிச் சென்றவர்களின் உருவங்கள் பதிவாகி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து மறைமலைநகர் காவலாளர்கள் வழக்குப் பதிந்து ரஷியா மற்றும் நியூசிலாந்து முயல்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த முயல்களின் எடை 4 கிலோவில் இருந்து 5 கிலோ வரை இருக்கும். இவை அதிகம் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டாலும், இதன் தோல் கைவினைப் பொருட்கள் செய்ய பயன்படுகின்றன.
அதிக பாதுகாப்புடன் இருக்கும் விலங்கு அறிவியலுக்கான முதுநிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வெளிநாட்டு முயல்கள் திருடப்பட்டு இருப்பது பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.