
காஞ்சிபுரத்தில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் பாய், “தமிழகத்தில் முழுநேர ஆளுநரை மத்திய அரசு விரைவில் நியமிக்கும்” என்று சொன்னார்.
இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு அவதார விழாவையொட்டி சியாமா சாஸ்திரி 5–வது தேசிய பாரம்பரிய இசை நிகழ்ச்சி காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடந்து வருகிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் பாய் தலைமை விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.
அவர் பேசியது:
“இசை என்பது அனைவரையும் ஒன்று சேர்ப்பது. இது தென்னிந்தியாவில் கர்நாடக இசை என்றும், வட இந்தியாவில் இந்துஸ்தானி என்றும் அழைக்கப்படுகிறது. இசையால் மழையை பொழிய வைத்த பெருமை தென்னிந்தியாவுக்கு உண்டு.
தமிழகத்தில் முழுநேர ஆளுநரை மத்திய அரசு விரைவில் நியமிக்கும்.
விவசாயிகள் பிரச்சனையில் மாநில அரசுடன் கலந்து பேசி அவர்களது பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
பா.ஜ.க. ஆட்சியில் இந்தியா நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது” என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சம்பிரதா சங்கீத பாரதியின் துணைத்தலைவர் நடராஜ சாஸ்திரி, தலைவர் சீனுவாச கோபாலன், காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.