பரபரப்பு! திருடன் என்று நினைத்து கல்லூரி மாணவனை கல்லால் அடித்து கொன்ற மக்கள்... 

First Published Apr 23, 2018, 7:54 AM IST
Highlights
People killed a college student thinking as thief


திருவண்ணாமலை
 
திருவண்ணாமலையில் திருடன் என்று நினைத்து கல்லூரி மாணவனை சரமாரியாக தாக்கியும், கல்லால் அடித்தும் மக்கள் கொலை செய்தனர். இதனையடுத்து அந்த மாணவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா சுமங்கலி கிராமத்தில் அடிக்கடி சந்தேகப்படும்படியாக, அறிமுகம் இல்லாத நபர்கள் சிலர் நள்ளிரவில் சுற்றித் திரிவதாலும், திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாலும் இக்கிராம மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சுமங்கலி கிராமத்தின் வழியாக சென்றார். அவரைப் பார்த்த சந்தேகப்பட்ட கிராம மக்கள் அவரை மடக்கினர். 

மக்கள் கூட்டத்தை கண்டு அந்த இளைஞர் பயந்துபோய் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். இதனால் அந்த இளைஞரை திருடன் என்று நினைத்து, கிராம மக்கள் அவரை துரத்தி சென்று மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கியும், கல்லால் அடித்தும் உள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மோரணம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் செய்யாறு தாலுகா தென் தண்டலம் கிராமத்தை சேர்ந்த சாமிகண்ணு என்பவரின் மகன் சதாசிவம் என்பதும், தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் சதாசிவத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சதா சிவத்தின் உறவினர்கள் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவரது உடல் இல்லாததால் மருத்துவமனை எதிரில் செய்யாறு - ஆற்காடு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியின்பேரில் மறியலை கைவிட்டனர். 

இந்த சம்பவம் குறித்து மோரணம் காவலாளர்கள் கொலை வழக்காக பதிவு செய்து, சுமங்கலி கிராமத்தை சேர்ந்த சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!