
திருவள்ளூர்
திருவள்ளூரில் உள்ள விச்சூர் கிராமத்தில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பசுத்யூஷன்பரத் தலைமையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த சோழவரம் ஒன்றியத்தைச் சேர்ந்தது விச்சூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் அடங்கிய விச்சூர் கிராமத்தில் 8000 பேர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவின்பேரில் மத்திய அரசின் திட்டங்களான "பிரதம மந்திரி ஜீவன்ஜோதி", "பீமாயோஜனா" எனப்படும் "காப்பீடு திட்டம்" மற்றும் "விபத்து காப்பீடு திட்டம்" ஆகியவை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும், தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட பணியாளர்களுக்கும் சோழவரம் ஒன்றியம் சார்பில் விச்சூர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை சார்பு செயலாளர் பசுத்யூஷன்பரத் நேற்று விச்சூர் கிராமத்துக்கு நேரில் வருகை தந்தார்.
அதன்பின்னர் மகளிர் சுயஉதவி குழுவினர், ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை நேரில் சந்தித்து திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது பெண்களிடம் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு திட்டத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
பெண்கள் அனைவரும் இரு காப்பீடு திட்டங்களுக்கும் ரூ.312 செலுத்துவதாக தெரிவித்தனர். பின்னர் அனைத்து பெண்களிடம் கலந்துரையாடி மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்தி பயன்பெறுமாறு வேண்டிக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது சோழவரம் ஒன்றிய ஆணையர் நர்மதா, வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், ஊரக வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோன்மேரி, ஊராட்சி செயலாளர் கிருஷ்டியன் உள்பட பலர் உடனிருந்தனர்.