நிதிநிறுவனம் நடத்தி ரூ.2 கோடியை அபேஸ் செய்த கணவன், மனைவி கைது; தலைமறைவான மற்றொருவருக்கு வலைவீச்சு...

 
Published : Apr 23, 2018, 07:35 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
நிதிநிறுவனம் நடத்தி ரூ.2 கோடியை அபேஸ் செய்த கணவன், மனைவி கைது; தலைமறைவான மற்றொருவருக்கு வலைவீச்சு...

சுருக்கம்

Arrested husband and wife for fraud rs.2 crores searching another person ...

திருவள்ளூர்
 
திருவள்ளூரில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.1 கோடியே 93 இலட்சத்து 43 ஆயிரத்து 507-ஐ அபேஸ் செய்த கணவன், மனைவியை  காவலாளர்கள் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், திருத்தணி காவல் நிலையம் தெருவைச் சேர்ந்த சங்கரன் (45), அவரது மனைவி மணிலா சங்கரன் (45), திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் தனியார் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர்.

அவர்கள் மாதம் ரூ.1000 என மூன்று ஆண்டுகளுக்கு 36 ஆயிரம் செலுத்தினால் முடிவில் ரூ.53 ஆயிரத்து 600 வழங்கப்படும் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து திருவாலங்காடு பழையனூர், மணவூர், சக்கரநல்லூர், நார்த்தவாடா, நல்லாட்டூர், கனகம்மாசத்திரம் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 2000 பேர் அந்த திட்டத்தில் சேர்ந்து மாதம் தோறும் பணம் செலுத்தி வந்தனர்.

அப்போது, அந்த நிதிநிறுவனத்தினர் மக்களிடம் அத்திட்டத்தில் சேர்ந்ததற்கான பாண்டு பத்திரத்தை கொடுத்தனர். மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தருமாறு மக்கள் அணுகியபோது பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தியுள்ளனர். 

இப்படி, அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி சுமார் 18 மாதங்கள் ஓடிவிட்டன. பணம் தராமல் மக்களை அலைக்கழித்து வந்த அவர்கள் ரூ.1 கோடியே 93 இலட்சத்து 43 ஆயிரத்து 507 மோசடி செய்துள்ளனர். 

இந்த நிலையில் பணத்தை கேட்க சென்றபோது மக்களை, அந்நிறுவனத்தினர் விரட்டியடித்து உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த தனியார் நிதிநிறுவனத்தின் நிர்வாகிகள் சங்கரன், மணிலாசங்கரன், செந்தில்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடமும் புகார் மனு கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன், ஆய்வாளர் அனுமந்தன், உதவி ஆய்வாளர்கள் மகேஸ்வரி, சுரேஷ், வீரமணிகண்டன், வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் காவலாளர்கள் திருத்தணியில் இருந்த சங்கரன், அவரது மனைவி மணிலாசங்கரன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!