
திருப்பூர்
ஆண்டு முழுவதும் சாகுபடி செய்ய கூடிய ஆனைமலை - நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூரில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனைமலை - நல்லாறு அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்ற்னர்.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்ய முடியும். ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் அரசு கிடப்பில் போட்டுவருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி அனைத்து அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆனைமலை - நல்லாறு அணைத் திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆனைமலை - நல்லாறு தண்ணீருக்கான இயக்கம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணியினர் மற்றும் விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கச் செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி தலைமை வகித்தார். பல்லடம் பகுதி தலைவர் வேல்முருகன் வரவேற்றார்.
இதில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.கே.டி. பொன்னுசாமி, பொருளாளர் மருத்துவர் தங்கராஜ், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஏர்முனை இளைஞரணி மாவட்டத் தலைவர் ஜோதி பிரகாஷ், செயலாளர் குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் சுசீந்திரன் மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி பேசியது: "கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன பெற்றுள்ளது.
இந்த நிலங்களுக்கு கடந்த காலங்களில் ஆண்டுக்கு 8 மாதங்கள் வரை தண்ணீர் கிடைத்தது. இதனால் வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, பருத்தி, பெரிய வெங்காயம் சாகுபடி செய்து வந்தனர். இதனால் 2 இலட்சம் விவசாயிகள் பயனடைந்தனர்.
ஆனால், தற்போது ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அதுவும் போதிய அளவு கிடைக்காததால் தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாயம் அழிந்து வருகிறது.
எனவே, விவசாயத்தை காப்பாற்ற ஆனைமலை - நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு கோடை காலங்களில் தண்ணீரை பயன்படுத்தலாம்" என்று அவர் பேசினார்.