
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் டாஸ்மாக் சாராயக் கடையை மூடச்சொல்லி கஞ்சி காய்ச்சி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் தன்மையையும், மக்களின் வீரியத்தையும் உணர்ந்து சாராயக் கடையை மூடுவதாக டாஸ்மாக் மேலாளர் உறுதியளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை பேருந்து நிலையத்தில் இருந்து தலக்குளம் செல்லும் சாலையில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்றுள்ளது.
இந்தப் பகுதியில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள் இருக்கின்றன. சாராயம் வாங்க வரும் குடிகாரர்களால தங்களுக்கு தொந்தரவு ஏற்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, இந்தக் கடையை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் சாராயக் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் சினம் கொண்ட மக்கள் இந்த டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற கோரி போராட்டம் நடத்த முடிவெடுத்தனர்.
அதன்படி, நேற்று மதியம் 12 மணியளவில் திங்கள்சந்தை, முரசங்காடு, மாங்குழி, பக்கிரிவிளை, ஆரோக்கியபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கடை முன்பு குவிந்தனர். அவர்கள் கடையைத் திறக்க விடாமல் கடை முன்பு அமர்ந்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் மக்களுக்கு ஆதரவாக காரங்காடு வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜார்ஜ், முரசங்கோடு பங்குத்தந்தை பெனிட்டோ, ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை டோமினிக்சாவியோ, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் முருகேசன், விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர். இதனைக் கண்ட சாராயக் கடையைத் திறக்க வந்த ஊழியர்கள் திரும்பச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த குளச்சல் காவல் துணை கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, இரணியல் ஆய்வாளர் சுதேசன் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மக்களிடம் பேச்சுவார்ததையில் ஈடுபட்டனர்.
அப்போது, மக்கள் தரப்பில் கூறியது: “இந்த கடைக்கு வரும் குடிகாரர்களால் பெண்கள், மாணவிகள் சாலையில் நடமாட முடியவில்லை. எனவே, இந்த சாராயக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று லியுறுத்தினர்.
அப்போது, மக்களிடம் பேசிய டாஸ்மாக் மேலாளர், பிரச்சனைக்குரிய சாராயக் கடையை நிரந்தரமாக மூடுவதாக உறுதியளித்தார்.
இதனையேற்று போராட்டம் நடத்திய மக்கள் தங்கள் போராட்டம் வெற்றி அடைந்ததை எண்ணி அங்கிருந்து மகிழ்ச்சியுடன் கலைந்துச் சென்றனர்.