ஓ.பி.எஸ்-ஸின் கிணற்றை தானமாக வழங்க கோரி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்…

First Published Jul 14, 2017, 8:43 AM IST
Highlights
People held in candle lighting struggle for ops should donate his well


தேனி

பெரியகுளத்தில் ஒ.பன்னீர்செல்வம் தோட்டத்தில் வெட்டப்பட்ட கிணற்றை ஊராட்சிக்கு தானமாக வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இலட்சுமிபுரத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தில் புதிதாக கிணறு ஒன்று வெட்டப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் குடிநீர் ஆதாரமாக இருந்த கிணறு வறண்டு விட்டது என்றும், விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் இலட்சுமிபுரம் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், சாலை மறியல், கிணற்றை முற்றுகையிடுதல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தங்களது பாதிப்பை வெளிப்படுத்தினர்.

இலட்சுமிபுரம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வைகை அணையில் இருந்து புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்து கிணற்றை கிராம மக்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும், மக்கள் தரப்பினருக்குமான பேச்சுவார்த்தை தேனி என்.ஆர்.டி. நகரில் நேற்று நடத்தப்பட்டது.

மக்கள் தரப்பில் ஊர் சமுதாயத் தலைவர் கார்த்திகேயன் உள்பட ஆறு பேர் பங்கேற்றனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவருடைய தம்பியும், பெரியகுளம் நகராட்சி முன்னாள் தலைவருமான ஓ.ராஜா, உறவினரும், வழக்கறிஞருமான சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஊர் சமுதாயத் தலைவர் கூறியது:

‘இது முதல் கட்டப் பேச்சுவார்த்தைதான். எங்கள் தரப்பில் சில கோரிக்கைகளும், அவர்கள் தரப்பில் சில கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து ஊர் மக்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இரண்டாவது கட்டமாக நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது’ என்று கூறினார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கிணற்றை ஊராட்சிக்கு தானமாக வழங்கக்கோரி இலட்சுமிபுரம் பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

tags
click me!