
கரூர்
தண்ணீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, அரசு அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் தொலைபேசி மூலமே தொடர்பு கொண்டு பிரச்சனையைத் தீர்த்து வைத்தனர்.
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், தேவர்மலை ஊராட்சி, ஐயம்பாளையத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் 30 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் மூன்று ஆழ்குழாய் கிணற்று நீர் வழங்கப்பட்டன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும், மின்மோட்டார்கள் பழுது ஏற்பட்டதாலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மேலும், பழுதடைந்த மின் மோட்டார்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறையினர் கழற்றி எடுத்துச் சென்றுவிட்டனர். அதனால், அப்பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்களுக்கு காவிரி குடிநீரும் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தற்போது ஐயம்பாளையம் பகுதியில் பரவலாக மழை பெய்து ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
எனவே, மின் மோட்டார்களை சரி செய்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) ஐயம்பாளையத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சினம் கொண்ட மக்கள் குடிநீர் வழங்கக்கோரி ஐயம்பாளையம் அருகே உள்ள சீத்தப்பட்டியில் பாளையம் - திருச்சி சாலையில் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அரசு அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்ததால் அவர்கள் மக்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இன்று (நேற்று) மாலைக்குள் ஆழ்குழாய் கிணறுகளில் மின்மோட்டார்கள் பொருத்தி குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பாளையம் - திருச்சி சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.