
சென்னை மெரீனாவில் நிரந்தர தூக்கத்தில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் நேற்று உருக்கமான காட்சி. ‘ஜெயா பாட்டியைப் பார்த்து கும்பிட்டுக்கோ’ என்று ஒரு மூதாட்டி, தனது பேரனிடம் சொல்லி, கையெடுத்து கும்பிடச் சொன்னது ஜெயலலிதாவை சமானிய மக்கள் இன்னும் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக இருந்தது.
குடும்பத்தில் ஒருவர்
உயிரோடு இருந்தவரை முதல்வர், அம்மா என்று அழைத்த மக்கள் அவரின் மறைவுக்கு பின், தங்கள் குடும்பத்தோடு ஒருவராக எண்ணி ஜெயா பாட்டியாக கொண்டாடத் தொடங்கிவிட்டனர்
பல பரிமாணம்
அதிமுகவுக்கு ஜெயலலிதாதான் ஆதர்ஷ தெய்வம், எதிர்க்கட்சியினருக்கு குற்றவாளி, மக்களுக்கோ தங்களின் வறுமையைப் போக்க எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்திக்காட்டிய முதல்வர். பெண்களுக்கு இவர் தாய். இப்படித்தான் இறந்தபின் பலபரிமாணங்களில் ஜெயலலிதா ஔிர்கிறார்.
மண்ணைவிட்டு
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 70 நாள் சிகிச்சை பலன் அளிக்காமல், டிசம்பர் 5-ந்தேதி மரணமடைந்தார்.
மக்கள் கூட்டம்
இந்த மண்ணைவிட்டு ஜெயலலிதா மறைந்தாலும், மெரீனாவில் இருக்கும் அவரின் சமாதிக்கு வரும் மக்கள் கூட்டம் கடந்த 6 மாதங்களாகக் குறையவில்லை.
15 ஆயிரம்
ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், மாணவர்களும் என நாள்தோறும் ‘அம்மா சமாதிக்கு’ நாள்தோறும் கூட்டம் கூட்டமாக படையெடுக்கிறார்கள். நாள்தோறும் 15 ஆயிரம் பேருக்கு குறைவில்லாமல் வந்து செல்கிறார்கள் என்று அங்கு பணியில் இருக்கும் போலீசார் தெரிவிக்கிறார்கள்.
அதிமுக கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது, ஜெயலலிதா அனுதாபிகள், சுற்றுலாபயணிகள் என ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்று ஜெயலலிதாவின் சமாதியை பார்த்துச் செல்கிறார்கள்.
எம்.ஜி.ஆருக்கு பின்..
அதிலும் கிராமப்புற மக்களுக்கு எம்.ஜி.ஆருக்கு பின், ஜெயலலிதாவின் இறப்பு என்பது ஈடுசெய்ய முடியாத இழப்பாகப் பார்க்கிறார்கள். மெரினாவில் ஜெயலலிதா சமாதியை பார்க்க வரும் கிராமப்புற மக்கள், ஜெயலலிதாவின் நலத்திட்டங்களையும், உதவிகளையும் பேச மறப்பதில்லை.
துணிச்சல்
சென்னையில் அரசுத்தேர்வு எழுத பயிற்சி பெற்றுவரும் பி. கல்பனா கூறுகையில், “ பெண்களில் ஒருவராக ஜெயலலிதா இருந்தபோதிலும், அவர் அனைவருக்கும் உத்வேகத் தலைவராக இருந்தார். ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில் அவர் துணிச்சலுடன் நிலைத்து நின்றது ஈர்த்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.
நலத்திட்டங்கள்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் இருந்து சுற்றுலா வந்த பெண் பயணி ஜெயந்தி என்பவர் கூறுகையில், “ எல்லோரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றார்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், அம்மாதான் பசுமாடுகள், ஆடுகள், அம்மா உணவகம், உள்ளிட்ட பல நலத்திட்டங்களை உருவாக்கினார். பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களை பலவற்றை உருவாக்கி மதிக்கவைத்தார்’’ என்றார்
இப்படி மக்கள் ஒருபக்கம் ஜெயலலிதாவின் புகழையும், அவரின் அறிவித்த திட்டங்களையும் ஒருவொருக்கு ஒருவர் பேசிக்கொண்டே நகர்ந்தனர்.
விற்பனை
மற்றொரு பக்கம் சிலர் ஜெயலலிதாவின் சிறிய பாக்கெட் சைஸ் போட்டோ, சிறிய டைரி, அவரின் வரலாறு ஆகியவற்றை விற்பனைக்கு வைத்து இருந்தை ஆர்வத்துடன் மக்கள் வாங்கிக்கொண்டு இருந்தனர்.
பாதுகாப்பு
இங்கு வரும் மக்களுக்காக போலீசார் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சி.சி.டி.வி கேமிராக்களையும் பொருத்தி பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக துணை ஆணையர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேசமயம், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நினைவிடத்துக்கு தடை
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க ரூ.15 கோடியை மாநில அரசு ஒதுக்கிய போதிலும், நீதிமன்ற வழக்கால் நினைவிடம் எழுப்பும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.
மனதில் நீங்காஇடம்
யார் என்ன சொன்னாலும், எதிர்க்கட்சிகள் தூற்றினாலும் சாமானிய மக்களின் தலைவராகவே மக்கள் ஜெயலலிதாவை இன்னும் பார்க்கிறார்கள்.
ரூ.15 கோடியில் நினைவிடம் அமைக்காவிட்டால் என்ன?, எங்கள் மனதில் அவருக்கு நீங்கா இடம் கொடுத்துவிட்டோம் என்று சொல்லிக்கொண்டே இங்கு வந்து செல்லும் மக்கள் நகர்கிறார்கள்.