
கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த அரசு பேருந்து ஓட்டுனரை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் போக்குவத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொழிலாளர்களுடன் 5 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் நேற்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து மக்கள் சிரமத்தை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அரசு பேருந்தை முன் அனுபவம் இல்லாத தற்காலிக ஓட்டுனர்களை வைத்து தமிழக அரசு இயக்கி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதியில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோப சந்திரம் என்ற இடத்தில் அரசு பேருந்து கண்ணாடியை கல் வீசி உடைத்து விட்டு அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் தப்ப முயன்றுள்ளார்.
இதையடுத்து பேருந்தில் வந்த பயணிகள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.