
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று நடைபெறவிருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் போக்குவத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொழிலாளர்களுடன் 5 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் நேற்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து இன்று மாலை 3.30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் யாசிம் பேகம் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த பேச்சுவார்த்தை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது.
துணை ஆணையரின் அழைப்பை அடுத்து அனைத்து தொழிற்சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். ஆனால் அரசு தரப்பில் யாரும் வராததால் பேச்சுவார்த்தையை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் வேலை நிறுத்தம் வாபசில் கடும் இழுபறி நிலவி வருகிறது.
இதனிடையே போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.