
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை ஆகியவை வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சாருடன், தொழிற்சங்கள் நடத்தி 5 கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், நேற்று மாலை முதல் மாநிலம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால், பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். காலை வேலைக்கு செல்வோர், ஷேர் ஆட்டோக்களிலும், சாதாரண ஆட்டோக்களிலும் அதிக பணம் கொடுத்து சென்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தொழிற்சங்கத்தினருடன், பேச்சு வார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் யாசின் பேகம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதைதொடர்ந்து இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் இந்த பேச்சு வார்த்தை நடக்க இருக்கிறது. இதில் சுமுக முடிவு ஏற்பட்டால், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.