தனக்கு தானே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் வசந்தி. 38 வயதாகும் இவரின் கணவர் செந்தில்( 48) கட்டிட தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஏற்கன்வே 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் 6 முறையாக கர்ப்பம் அடைந்த வசந்தி மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்கு தானே வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு ஆண்குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
பிரசவத்தை தொடர்ந்து வசந்திக்கு அதிக ரத்தப்போக்கு இருந்ததால் அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வசந்தி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து எந்த தகவலும் சொல்லாமல் அவரின் உடலை கணவரும், உறவினர்களும் எடுத்து சென்றுவிட்டனர். இதை தோடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவரின் வீட்டில் ரத்தக்கறையுடன் இருந்த வாளியில், பிறந்த ஆண் குழந்தையின் சடலம் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், வசந்தி மற்றும் இறந்து போன குழந்தையின் உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் கணவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனக்கு தானே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உரிய வசதிகள் இன்றி பிரசவம் பாரத்ததால் ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கு காரணமாகவே வசதி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனால் பிறந்த சிசு எப்படி உயிரிழந்தது என்று தெரியவில்லை. எனவே இதுகுறித்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நிலையிலேயே குழந்தை பிறந்ததா அல்லது தாயே அதனை கொன்றுவிட்டாரா என்பது போலீசார் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.