
Government employees Passport procedures : தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அகவிலைப்படி (DA) உயர்வானது 2024 ஜூலை 1 முதல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 50%லிருந்து 53% ஆக 3% உயர்த்தப்பட்டது. இந்த உயர்வு மத்திய அரசின் அறிவிப்பைப் பின்பற்றி மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது. ஈட்டிய விடுப்பு சரண் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். இதன்மூலம் 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம்.
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய தமிழக அரசு ஒரு குழு அமைக்கப்பட்டு, 9 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பொறுத்து அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
மேலும் அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, திருமண உதவி உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கும் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வீட்டுக் கடன் திட்டம்: அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெறவும் நடவடிக்கை வகுத்துள்ளது.
இதனிடையே அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று (NOC)பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு தங்கள் துறையின் உயர் அதிகாரியிடம் தடையில்லா சான்று (No Objection Certificate - NOC) பெற வேண்டும். இந்த சான்று, ஊழியருக்கு எதிராக எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் இல்லை என்பதை உறுதி செய்கிறது. பாஸ்போர்ட் பெறுவதற்கு முன் அனுமதி தேவையில்லை என்றாலும், வெளிநாடு செல்வதற்கு துறை தலைமையகத்தின் முன் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி, பயணத்தின் நோக்கம், செல்லும் நாடு மற்றும் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் அரசாணையின்படி, SimpleGov முயற்சியின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடு செல்லும் தமிழக அரசு ஊழியர்கள், தங்களுக்கான அடையாளச் சான்றிதழ் பெறுவது, பாஸ்போர்ட் வாங்குவது அல்லது அதை புதுப்பிப்பதற்கான தடையில்லா சான்றிதழ் பெறுவது மற்றும் வெளிநாடு செல்வதற்கான தடையில்லா சான்றிதழ் பெறுவது போன்றவற்றிற்கான நடைமுறை குறித்து தமிழக அரசின் 24-ஏ விதியில் கூறப்பட்டுள்ளது. அதை எளிமைப்படுத்துவதற்கான கோரிக்கைகள் கடந்த பிப்ரவரி மாதம் அரசுக்கு அளிக்கப்பட்டன. அதை தனிக் குழு ஆய்வு செய்து சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது.
அதை அரசு ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற வகையில் அரசு விதியில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சிக்கலான நடைமுறைகள் குறைக்கப்பட்டு, எளிய முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.passportindia.gov.in) (www.passportindia.gov.in) அல்லது பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்களை (அடையாளச் சான்று, முகவரிச் சான்று, NOC) டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம்.
அதன்படி முதலில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள முறைப்படி ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ். மூலம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு தகவல் கடிதம் அனுப்ப வேண்டும். அதன் பின்னர் புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர நிலை என்றால் மட்டும் அதற்கான விண்ணப்பத்தை ஏற்று, நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியே அடையாளச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் வாங்குவதற்கான தடையில்லா சான்றிதழை வழங்குவார் என அந்த வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் தடையில்லா சான்றிதழை பெற்ற பிறகே வெளிநாட்டிற்கு அரசு ஊழியர் பயணம் செல்ல முடியும். அரசு திட்டங்களின் கீழ் சவுதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை, ஜெருசலேம் பயணம் ஆகியவை மேற்கொள்ள தடையில்லா சான்றிதழ் பெறத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. அதே நேரம் அரசு ஊழியர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, அரசின் அனுமதி பெறாமல் அங்கு வேலை தேடக்கூடாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.