ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 500 பயணிகள் அங்கு சிக்கியுள்ளனர்.
ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள அனைத்து பயணிகளும் நாளை பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும் பின்னர் அவர்கள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
திருசெந்தூரில் இருந்து சென்னையை நோக்கி ஞாயிறு இரவு 800 பயணிகளுடன் புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தொடர் கனமழை காரணமாக பயணத்தைத் தொடர முடியாமல் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் ஶ்ரீவை ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள அனைத்து பயணிகளையும் மீட்கும் முயற்சியை ரயில்வே தொடங்கியது.
நேற்று இரவு முதல் அங்கிருக்கும் பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவும் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. 800 பயணிகளில் 300 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 500 பயணிகள் ரயில் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்
கனமழை தொடர்ந்து பெய்துவந்ததால், சாலையில் உடைப்பு ஏற்பட்டு பயணிகளை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது.
ரயிலில் சிக்கியுள்ள 800 பயணிகளை மீட்பது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் பேரிடர் மீட்புப் படையினருடன் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், ரயில் பயணிகள் பத்திரமாக இருப்பதாக நெல்லை சந்திப்பு ரயில் நிலைய மேலாளர் தெரிவித்துள்ளார்.
நாளை அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் பயணிகள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தென் மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ரயில் சேவைகள் ரத்து