மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜனவரி 2ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு தென் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு தொடங்கி விடாமல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆபத்தான நிலையில், கரையோரம் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விடாமல் வெளுக்கும் மழை! நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தென் மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்காக ரெட் அலர்ட் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு தென் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் டிசம்பர் 30ஆம் தேதி வரை இருக்கும் நிலையில், ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 19) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை கனமழை: வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரம்