
திருப்பூர்
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி அடைய வேண்டி, திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ அயக்கிரீவர் பூசை நடைபெற்றது.
திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் பெற வருடா வருடம் திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ இலட்சுமி அயக்கிரீவர் சன்னிதியில் சிறப்பு பூசை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, ஸ்ரீ அயக்கிரீவர் பூசை நடைபெற்றது. தொடர்ந்து, பிப்ரவரி 19, 26-ஆம் தேதிகளிலும் இந்த பூசை நடைபெற இருக்கிறது.
இந்த பூசையையொட்டி நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வி, 10.30 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், 11 மணிக்கு நாம சங்கீர்த்தனம், 11.30 மணிக்கு சாத்துமறை, மகா தீபாராதனையும் நடைப்பெற்றது.
இதில், ஏராளமான அடியார்களும், மாணவர்களும் மற்றும் மாணவர்களின் பெற்றொர்களும் கலந்து கொண்டனர்.