
திருநெல்வேலி
திருநெல்வேலியில் குடிப்பழக்கத்தை விடும்படி பெற்றோர் கண்டித்ததால் பூச்சி மருந்தை குடித்து மகன் தற்கொலை செய்துகொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை, லாலாகுடியிருப்பு வடக்கு தெருவைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் ஜான்சன் (27). இவர் பீடிக் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.
ஜான்சனுக்கு குடிப்பழக்கம் இருந்தது.மேலும், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தினமும் ரகளையில் ஈடுபடுவதையும், வீட்டில் இருப்பவர்களை தொந்தரவு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தாராம்.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் வீட்டுக்கு சாராயம் குடித்துவிட்டு வந்திந்தார் ஜான்சன். வீட்டுக்குள்ளே சென்ற ஜான்சன், குடும்பத்தினருடன் தகராறு ஈடுபட்டுள்ளார்.
இதனைக் கண்டித்த பெற்றோர் ஜான்சனை சாராயத்தை விடும்படியும், குடும்பத்தையும் கவனிக்கும் படியும் அறிவுரை கூறி திட்டியுள்ளனர். இதனால் குடிபோதையில் இருந்த ஜான்சன் மனமுடைந்தார்.
வீட்டில் இருந்து எதுவும் சொல்லாமல் வெளியே வந்த ஜான்சன், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலனின்றி ஜான்சன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
குடிப்பழக்கத்தை விடும்படி பெற்றோர் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்து மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.