வீடு முழுவதும் பைக் பார்ட்ஸ்; வசமாக சிக்கிய பலே திருடர்கள்; 27 பைக்குகள் பறிமுதல்...

First Published Jun 22, 2018, 6:59 AM IST
Highlights
bike thieves were caught by police in thiruchi


திருச்சி

திருச்சியில் பலநாள்களாக மோட்டார் சைக்கிள் வாகனங்களை திருடி அதனை உதிரி பாகங்களாக பிரித்து விற்ற திருடர்கள் இருவரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் களவாடப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த 15-ஆம் தேதி பட்டாபிராமன் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு அண்டகொண்டான் சின்னசாமி நகரில் ஒரு வீட்டிற்கு கொண்டு சென்றுக் கொண்டிருந்தார் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த அசாருதீன் (25). இவரை கைகாட்டி நிறுத்திய தில்லைநகர் காவலாளர்கள் இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அது திருட்டு வண்டி என்பது தெரியவந்தது.

பின்னர், அவர் இதுவரை தான் திருடிய அனைத்து மோட்டார் சைக்கிள் வாகனங்களை பற்றியும் காவலாளர்களிடம் தெரிவித்து போலீஸை வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு அவரது வீட்டில் ஏராளமான மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்கள் குவிந்து கிடந்தன. 

திருடிய மற்றும் திருட்டு இரு சக்கர வாகனங்களை உதிரிபாகங்களாக மாற்றி குடோனாக அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தாராம். மேலும், அந்த குடோனில் வேலை பார்த்து வரும் தென்னூர் பகுதியை சேர்ந்த முஸ்தபாவும் (18) போலீஸிடம் சிக்கினார்.

அசாருதீன், முஸ்தபா ஆகியோரிடம் காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இரு சக்கர வாகனங்களை திருடி உதிரிபாகங்களாக மாற்றி மெக்கானிக்கல் கடை, இரு சக்கர வாகன பட்டறை, பழைய இரும்பு பொருட்கள் குடோன் ஆகியவற்றில் விற்று வந்தது தெரியவந்தது. 

மேலும், வெளிநபர்கள் திருடி வந்த மோட்டார் சைக்கிள்களையும் ரூ.5000 முதல் ரூ.7000 வரை விலை கொடுத்து வாங்கி அதனையும் உதிரிபாகங்களாக மாற்றி விற்று வந்தனர். 

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை சடுதியில் பிரித்து உதிரி பாகங்களாக மாற்றுவதும், என்ஜின் மற்றும் சேஸ் எண்களை உடனடியாக உளி மூலம் அழித்து விடுவதும் இவர்களுக்கு கைவந்த கலை. 

குடோனில் குவிந்து கிடந்த மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் காவலாளர்கள் இறங்கினர். அசாருதீன், முஸ்தபா மற்றும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகளை வைத்து இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. 

இதில் 27 மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து பல பாகங்களாக சிதறி கிடந்த உதிரி பாகங்களை ஒன்று சேர்த்து அந்த 27 மோட்டார் சைக்கிள்களையும் உருவாக்கினர். மேலும் 10 இரு சக்கர வாகனங்களின் சேஸ்கள் எண்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களில் என்ஜின் எண்கள் அழிக்கப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டன. 

இதனையடுத்து அசாருதீன், முஸ்தபா ஆகிய இருவரையும் காவலாளர்கள் நேற்று கைது செய்தனர். 27 மோட்டார் சைக்கிள் களையும் மீட்டனர். சேஸ்கள், என்ஜின்களை பறிமுதல் செய்தனர். 

இவற்றின் மதிப்பு மொத்தம் ரூ.4 இலட்சத்து 19 ஆயிரம் இருக்குமாம். கைதான இருவரையும் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-4ல் சமர்ப்பித்து மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் மூவரை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். 
 

click me!