Omicron : அச்சுறுத்தும் ஒமைக்ரான்… பள்ளிகளை மூடிவிட்டு ஆன்லைனில் பாடம் நடத்துங்கள்… வலுக்கும் கோரிக்கைகள்!!

By Narendran SFirst Published Dec 15, 2021, 3:43 PM IST
Highlights

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி விட்டு, ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி விட்டு, ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை மூடி, ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒமைக்ரான் என்னும் புதிய வகை கொரோனா வைரஸ் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகபட்சமாக மும்பையில் இதுவரை 20 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.  ராஜஸ்தானில் 9 பேர், டெல்லியில் 2 பேர், குஜராத்தில் 4 பேர், கர்நாடகாவில் 3 பேர் சண்டிகர், ஆந்திரா, கேரளாவில் தலா ஒருவர் என இதுவரை 41 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

அதேசமயம் டெல்லியில் முதன்முதலில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்குள்ளான 37 வயதான நபர் குணமடைந்து இன்று வீடு திரும்பினார். இதுவரை இந்தியாவில் 45 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதை அடுத்து தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் வதந்தி என்று தெரிவித்தார். இதற்கிடையே, தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் வைரறஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அண்டை மாநிலங்களுடன் உடனான எல்லைக் கண்காணிப்பை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி விட்டு, ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!