பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை தனிப்படை போலீஸார் ஆந்திரா அருகே கைது செய்துள்ளனர். இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகிய இருவரும் தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்டோ மதிவாணன். அவரது மனைவி மெர்லினா. இவர்கள் தங்களது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 18 வயதான பெண் வெளியிட்ட வீடியோ மூலம் இந்தக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது. இதனிடையே, ஆண்ட்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா இருவரும் தலைமறைவாகினர். அவர்கள் இருவரையும் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
திருப்பூரில் செய்தியாளர் நேசபிரபுவை தாக்கிய வழக்கு: கைதான இருவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்!
இந்நிலையில், வியாழக்கிழமை அவர்கள் இருவரையும் தனிப்படை போலீஸார் ஆந்திரா அருகே கைது செய்துள்ளனர். இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறையினர் கூறுகின்றனர். விசாரணைக்குப் பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்று காலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. அவரிடம் அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனிடையே, நேற்று ஆண்ட்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும்போதே ஜாமீன் மனுவைப் பரிசீலித்து உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரி வைத்துள்ளனர்.
தமிழக அரசின் இலக்கிய மாமணி விருதுகள் அறிவிப்பு! விருதாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு!